அமெரிக்காவில் தொடங்கவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் நேரில் கண்டு ரசிக்க அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்து, அது நிராகரிக்கப்பட்ட (Visa Denied) அர்ஜென்டினா ரசிகர்களின் கவலையைப் போக்கும் வகையில், அந்நாட்டைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று 100 பேருக்கு முற்றிலும் இலவசமாகப் புதிய எல்இடி டிவிகளை வாரி வழங்கி ஒட்டுமொத்த உலகையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அர்ஜென்டினாவின் முன்னணி கூட்டு நிறுவனமான ‘நியூசன்’ (Newsan) தனது ‘நோப்ளெக்ஸ்’ (Noblex) பிராண்ட் தொலைக்காட்சிக்காக இன்ஸ்டாகிராமில், “உங்களுக்கு விசா மறுக்கப்பட்டதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள், இலவச டிவியை அள்ளிக் கொண்டு போங்கள்” என்று ஒரு விசித்திரமான விளம்பரத்தை வெளியிட்டிருந்தது.
இதனைப் பார்த்துவிட்டு நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்குள் விசா நிராகரிக்கப்பட்டதற்கான ஆவணங்களுடன் பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்தின் முன்னால் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நின்றனர்.
லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பைத் தொடர் என்பதால் எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு விசா கிடைக்காமல் ஏமாற்றமடைந்த 24 வயது கேமிங் வீரர் தாமஸ் வேகெல்லர் உள்ளிட்ட முதல் 100 அதிர்ஷ்டசாலிகளுக்கு, “விசா மறுக்கப்பட்டது, நோப்ளெக்ஸ் டிவி அங்கீகரிக்கப்பட்டது” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பெட்டிகளுடன் புதிய டிவிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
கடந்த 2022 உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினாவில் தற்பொழுது கால்பந்து காய்ச்சல் கொஞ்சம் மிதமாக இருக்கும் சூழலில், விசா கிடைக்காமல் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த இலவச டிவி பரிசு பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் மாறியுள்ளது.
