கர்நாடக மாநிலம் பீதர் பகுதியைச் சேர்ந்த வைஜிநாத் மற்றும் அவரது மனைவி இந்துமதி தம்பதியினர், தங்களது 4 மகள்களுடன் பிழைப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இவர்களது உறவினரான ரேணுகா என்பவர், சமீபத்தில் நாராயணகுடாவில் உள்ள ஜல்மண்டலி அலுவலகம் அருகே ஆசையாக மாம்பழங்கள் வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

இந்த மாம்பழங்களை இந்துமதியும், அவரது 4 மகள்களும் ஆவலுடன் சாப்பிட்ட நிலையில், சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே ஐந்து பேருக்கும் திடீரென கடுமையான வயிற்று வலியும், கட்டுக்கடங்காத வாந்திப் போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைகுலைந்து போன அவர்களைக் குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு கச்சிகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அதிரடியாக அனுமதித்துள்ளனர்.

​மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வைஜிநாத்தின் 3-வது மகளான புவனேஸ்வரி (வயது 17) திங்கள்கிழமையன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகமே இன்னும் மறையாத நிலையில், அடுத்த நாளே அவரது இளைய மகளான சந்தியாவும் (வயது 10) துடிதுடித்து உயிரிழந்தது ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது.

தற்போது தாய் மற்றும் மற்ற 2 மகள்களின் உடல்நிலை சீராக உள்ள நிலையில், இந்த விபரீத மரணம் குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நாராயணகுடா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்கிருந்த உணவுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்; பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இந்த கொடூர மரணத்திற்குக் காரணம் மாம்பழமா அல்லது வேறு ஏதேனும் சதியா என்ற முழு விவரம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்