தி.மு.க-வில் தொ.மு.ச, அ.தி.மு.க-வில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி போன்ற தொழிற்சங்கங்கள் வலுவாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகமும் (த.வெ.க) தொழிலாளர்களுக்காகப் புதிய தொழிற்சங்கப் பிரிவைத் தொடங்கியுள்ளது. த.வெ.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் தலைமையில் இதற்கான தீவிர ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.

அதன் இறுதி வடிவமாக, ‘தமிழக வெற்றிக் கழக தொழிற்சங்க பேரவை’ (TVKSP) என்னும் பெயரிலான புதிய தொழிற்சங்கம், சட்டபூர்வ விதிமுறைகளின்படி இன்று அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே த.வெ.க-வில் மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி எனப் பல்வேறு சார்பு அணிகள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தொழிலாளர்களின் உரிமைகளுக்காகத் தொழிற்சங்கமும் தொடங்கப்பட்டிருப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், அ.தி.மு.க-வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான கமலக்கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் அ.தி.மு.க-விலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ‘த.வெ.க தொழிற்சங்க பேரவை’ பிரிவின் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பட்டியலைத் த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான விஜய் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.