தமிழக பாரதிய ஜனதா கட்சியில் நீண்ட காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த முக்கிய நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டி, கட்சியில் இருந்து திடாரென விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது விலகல் குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியை வெறும் 3 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்திக் காட்டியவர் அண்ணாமலை என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், அப்படிப்பட்ட அண்ணாமலையைத் தேர்தல் கூட்டணிக்காக பாஜகவின் டெல்லி தலைமை முற்றிலும் புறக்கணித்துவிட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
Important Announcement
I have resigned from the @BJP4India and will be joining Thalaivar @annamalai_k avargal in his journey ahead. pic.twitter.com/RvmMamPt5E
— APR (@amarprasadreddy) June 10, 2026
மேலும், தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்களாக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு டெல்லி தலைமை தொடர்ந்து பதவிகளை வாரி வழங்கியதைச் சுட்டிக்காட்டிய அமர்பிரசாத் ரெட்டி, கட்சியை வளர்த்த அண்ணாமலைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கொந்தளித்துள்ளார். தற்போதைய சூழலில் பாரதிய ஜனதா கட்சிக்கும் திமுகவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என காரசாரமாகச் சாடிய அவர், இனி வரும் காலங்களில் அண்ணாமலையின் தனிப்பட்ட தலைமையைத் தலைவணங்கி ஏற்று, அவரோடு மட்டுமே பயணிக்கப் போவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
