உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயது தலித் இளைஞர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் கடந்த ஆறு மாதங்களாக நட்பு ரீதியாகப் பழகி வந்துள்ளார். இவர்களது நட்பை ஏற்க மறுத்த பெண்ணின் குடும்பத்தினர், சாதி வெறியின் காரணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பெண்ணை மிரட்டி கேதனைத் தங்களது கிராமத்திற்கு வரவழைத்துள்ளனர்.

தனது நண்பன் திவாகர் திம்ரியுடன் அங்குச் சென்ற கேதனைப் பெண்ணின் வீட்டார் ஒரு அறைக்குள் பூட்டி தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மறுநாள் அதிகாலை பெண்ணின் தந்தை, கேதனின் தந்தைக்குப் போன் செய்து மகனை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட கேதன் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் படுகாயமடைந்த அவரது நண்பர் திவாகர் திம்ரி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த உள்ளூர் மக்களும், கேதனின் குடும்பத்தினரும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்துக் கொலைக் குற்றம் மற்றும் பட்டியலினத்தவர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், இக்கொடூரக் கொலையில் தொடர்புடைய யஷ்வீர் சிங் பன்வார் என்ற நபரைத் தற்பொழுது காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.