மத்திய கிழக்கு பகுதியில் ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவி வரும் கடுமையான போர் பதற்றத்திற்கு இடையே, ஓமன் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த ‘எம்.டி. மேரிவெக்ஸ்’  என்ற வணிக ரீதியிலான எண்ணெய் கப்பல் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் கொடூரத் தாக்குதலால் கப்பலில் பெரும் விபத்து ஏற்பட்டு, அது கடலில் மூழ்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டது. அந்தச் சமயத்தில் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தனர். இந்தத் தாக்குதல் குறித்துத் தகவல் அறிந்தவுடன், சர்வதேச மீட்புக் குழுவினர் மற்றும் கடற்படைப் படையினர் அதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்புக் கப்பல்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மிகத் தீவிரமான மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, விபத்தில் சிக்கிய அந்த எண்ணெய் கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகள் உட்பட ஒட்டுமொத்தப் பணியாளர்களும் எவ்வித காயமுமின்றி மிக நல்வாய்ப்பாகப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.மீட்கப்பட்ட மாலுமிகள் அனைவரும் தற்பொழுது ஓமன் நாட்டின் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவிகளும், உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சர்வதேச கடல் வர்த்தகத்தில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில், வணிகக் கப்பல்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய தொடர் தாக்குதல்கள் உலக நாடுகள் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.