இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தனது முதல் ரியாக்ஷனை கொடுத்துள்ளார். செய்தி நிறுவனமான பிடிஐ-க்கு (PTI) அளித்த பேட்டியில் ஊடகங்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ள கபில் தேவ், “வைபவ் இப்போதுதான் இந்திய அணிக்குள் நுழைந்துள்ளார்.

அவர் இன்னும் ஒரு குழந்தை, இந்த வயதிலேயே அவர் மீது அதீத அழுத்தத்தை திணிக்கக் கூடாது. உள்ளூர் கிளப் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கும், சர்வதேச அளவில் நாட்டின் தொப்பியை அணிந்து விளையாடுவதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சிந்தனை முறை முற்றிலும் மாற வேண்டும். எனவே, ஊடகங்கள் அவர் மீது அதிக வெளிச்சம் போட்டு காட்டுவதைத் தவிர்த்து, அவரை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய கபில் தேவ், வைபவ் சூர்யவன்ஷி ஒரு அசாத்திய திறமைசாலி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும், ஆனால் அவர் தனது முழு கவனத்தையும், உடற்தகுதியையும்  தொடர்ந்து பராமரிப்பது மிக முக்கியம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அவர் எவ்வளவு தூரம் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறார் என்பதை அவர்தான் நிரூபிக்க வேண்டும் என்றும் கபில் தேவ் கூறினார். மேலும், தற்போதைய இந்திய அணியின் தேர்வில் ஐபிஎல் தொடர் மிக முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஐபிஎல் மூலமாக எந்த வீரர் எப்படி விளையாடுகிறார் என்பதை தேர்வாளர்களால் எளிதாகக் கண்காணிக்க முடிகிறது என்றும், இதன் காரணமாக தற்போதைய தேர்வு குழுவிற்கு திறமையான வீரர்களின் பல ஆப்ஷன்கள் கிடைப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.