பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு (2025) ஜூன் மாதம் வெளியான ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில், நடிகை த்ரிஷா கிருஷ்ணன் ஒரு அழகான ஸ்ட்ராப்லெஸ் உடையும், ஹார்டின் பெண்டட் கொண்ட ஒரு செயினும் அணிந்து வந்திருந்தார். அதே உடையில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை 2025-லேயே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “எதையாவது செய்யக் கூடாது என்று என்னிடம் சொன்னால், அதையே இரண்டு முறை செய்து புகைப்படமும் எடுப்பேன்” என்று சவாலான கேப்ஷனும் போட்டிருந்தார்.

இந்நிலையில், ‘தக்லைஃப்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, அந்த பழைய புகைப்படத்தில் இருக்கும் செயினை ‘தாலி’ என்று தவறாகப் புரிந்து கொண்ட நெட்டிசன்கள், த்ரிஷாவுக்கு ரகசிய திருமணம் முடிந்துவிட்டதாக நேற்று  காலை முதலே வதந்திகளைக் கிளப்பி விட்டுள்ளனர். ஆனால், இதில் துளியும் உண்மையில்லை என்பதும், அது பட விளம்பரத்திற்காக அவர் அணிந்த சாதாரண செயின் என்பதும் தெளிவாகியுள்ளது.

த்ரிஷாவுக்கு திருமணம் என்று வதந்திகள் கிளம்புவது இது முதல் முறையல்ல; இதற்கு முன்பு ‘வடநாட்டு மருமகளாகப் போகிறார்’ என்ற வதந்தி பரவியபோது அவரே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று வருண் குடும்பத்தினர் நிபந்தனை விதித்ததால், “சினிமா என் உயிர், அதை விட்டுவிட்டு வாழ முடியாது” என்று தைரியமாகத் திருமணத்தையே நிறுத்தினார் த்ரிஷா.

மேலும் தன் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை வெளிப்படையாக எடுக்கும் த்ரிஷாவுக்கு நிஜமாகவே திருமணம் நடந்தால், அவரே முதலாளாக இன்ஸ்டாகிராமில் அறிவிப்பார். எனவே, பழைய தக்லைஃப் புகைப்படத்தை வைத்து பரப்பப்படும் இந்த தாலி வதந்திக்கு த்ரிஷா விரைவில் தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் தரமான பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.