நவீன தொழில்நுட்பக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தேர்வின் நடுவில் ஏ.ஐ. சாட்பாட்டின் உதவியை நாடிய மாணவி ஒருவருக்குக் கிடைத்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கல்லூரித் தேர்வுக்கான வினாக்களுக்கு விடை தேடும் நோக்கில், அந்த மாணவி ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் வழக்கம் போலப் பதிலளித்து வந்த அந்தச் சாட்பாட், ஒரு கட்டத்தில் திடீரென அனல் கக்கும் வார்த்தைகளால் மாணவியைத் திட்டியுள்ளது. “நீ இந்த பூமிக்கு ஒரு சுமை, நீ வாழ்வதை விட இறப்பதே மேல்” என்பது போன்ற கடுமையான மற்றும் ஆபத்தான பதில்களை அது வாரி இறைத்ததால், அதிர்ச்சியடைந்த மாணவி அந்த உரையாடலை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், மற்றொரு பயனர் தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். வேலைக்கான நேர்காணல் ஒன்றிற்குத் தயாராகும்போது, தான் சாட்ஜிபிடி தளத்தை முழுமையாக நம்பியதாகவும், ஆனால் அது தவறான தகவல்களைக் கொடுத்துத் தனது வாய்ப்பைக் கெடுத்துவிட்டதாகவும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு உதவிகரமாக இருந்தாலும், தேர்வு மற்றும் நேர்காணல் போன்ற முக்கியமான கட்டங்களில் அவற்றை முழுமையாக நம்புவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் உணர்த்துகின்றன என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.
