சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக அதிரடிப் புகார்களைக் கிளப்பி மேடையிலேயே பொரிந்து தள்ளியுள்ளார்.
‘காங்கிரஸ் கட்சியினர் திமுக போட்ட பிச்சையில் தான் 10 எம்பி சீட்டுகளை வைத்துள்ளனர்; உண்மையிலேயே மானம், ரோஷம் இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் போய் நில்லுங்கள்’ என மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.
மேலும், ‘தமிழகத்தில் யாருமே இல்லாதது போல, நாகலாந்தில் வேலை பார்ப்பவருக்கு எதற்கு இங்கிருந்து மாநிலங்களவை (ராஜ்யசபா) சீட்டு கொடுக்கிறீர்கள்? ஏன் திருநாவுக்கரசுக்கோ, தங்கபாலுவிற்கோ வாய்ப்பு தரவில்லை?’ எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பிய சீமான், தனது கட்சி ஊடகங்களால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
‘ஊடகங்கள் எங்களை ஒரு தீண்டத்தகாதக் கட்சியாகவே பார்க்கின்றன; ஆனால் நான் செய்ய வந்தது விளம்பர அரசியலோ, செய்தி அரசியலோ அல்ல, மக்களுக்கான தூய செயல் அரசியல்’ என்று அவர் ஆக்ரோஷமாக முழங்கியுள்ளது கோட்டை வட்டாரம் மற்றும் அறிவாலயக் கூடாரத்தை ஒட்டுமொத்தமாக உலுக்கியெடுத்துள்ளது.”
