மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நியூ கஞ்சன்பூர் பகுதியில், நேகா சிங் (35) என்ற பெண் தனது வாடகை வீட்டில் கழுத்தில் துப்பட்டா கட்டப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தற்பொழுது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மயங்க் சிங் என்பவரைக் காதல் திருமணம் செய்து தனது 8 வயது மகனுடன் வசித்து வந்த நேகாவின் வீட்டில் இருந்து, கடந்த இரண்டு நாட்களாகத் துர்நாற்றம் வீசியதை அடுத்து வீட்டு உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கதவை உடைத்து சடலத்தை மீட்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2025 ஜனவரி மாதம் விஜயநகர் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா (Spa) மையத்தில் நடந்த போலீஸ் ரெய்டில் நேகாவின் பெயர் சிக்கியதாகவும், அதன் பிறகு தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் மிக முக்கிய சாட்சியான இவர்களின் 8 வயது சிறுவன், சம்பவத்தன்று பெற்றோருக்குள் பெரிய சண்டை நடந்ததாகவும், கடந்த இரண்டு நாட்களாக அம்மாவைப் பார்க்க விடாமல் தந்தை தடுத்து வந்ததாகவும் போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளான்.

மனைவியின் மரணத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த கணவன் மயங்க் சிங், தற்பொழுது சோபாபூர் மேம்பாலம் அருகேயுள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் பெற்றோர் இருவரையும் இழந்து தவிக்கும் 8 வயது சிறுவனின் நிலை அப்பகுதியினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகளின் அடிப்படையில் போலீசார் இந்த மர்ம மரணங்கள் குறித்துத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.