இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் முன்னணி செயலியாக வாட்ஸ்அப் திகழ்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரின் மொபைலிலும் தவிர்க்க முடியாத அங்கமாக வாட்ஸ்அப் மாறிவிட்டது. இந்நிலையில், சந்தையில் உள்ள பிற செயலிகளின் போட்டியை சமாளிக்கவும், தங்களது பயனர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, மிக முக்கியமான புதிய அப்டேட் ஒன்று விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நடைமுறைப்படி, வாட்ஸ்அப்பில் யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரின் ‘சாட்டையும் நாம் தனித்தனியாக திறந்து பார்க்க வேண்டியுள்ளது. ஆனால், இனி அந்த சிரமம் இருக்காது. இதற்காக ‘கான்டாக்ட் ஹப்’ (Contact Hub) என்ற புதிய பகுதியை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது. இந்த வசதியின் மூலம், யார் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்களோ, அவர்களை ஒரே இடத்தில் பார்த்துவிட முடியும். ஆன்லைனில் இருப்பவர்களின் முகப்புப் படத்திற்கு அருகில் பச்சை நிற புள்ளி தோன்றும். அதற்கு கீழே, சமீபத்தில் ஆன்லைனில் வந்து சென்றவர்களின் பட்டியலும் வரிசையாக இடம்பெறும். ஏற்கனவே பேஸ்புக் மெசேஞ்சரில் இருக்கும் இந்த அம்சம், தற்போது வாட்ஸ்அப்பிலும் சோதனை கட்டத்தில் உள்ளது. விரைவில் இது அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் வரவுள்ளதால், நண்பர்கள் மற்றும் அலுவலகத் தொடர்புகளுடன் உடனுக்குடன் இணைப்பில் இருக்க இது பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.