உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எச்டிஎப்சி (HDFC) தனியார் வங்கி கிளையில் பணிபுரியும் ஆஸ்தா சிங் என்ற பெண் ஊழியர், சில மாதங்களுக்கு முன்பு வங்கியின் உள்ளே ஆவேசமாக நின்று “நான் தாகூர் வம்சத்தைச் சேர்ந்தவள்” (Thakur Hoon Mein) என்று சாதிய ரீதியாகப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது.

பலரும் அவரின் சாதிய அகங்காரத்தைக் கண்டித்து வந்த வேளையில், தற்போது அந்தப் பெண் ஊழியர் தனக்கு நேர்ந்த அநாகரிகக் கொடுமை குறித்துப் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த வழக்கிற்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் திருப்பத்தைக் கொடுத்துள்ளார்.

இணையத்தில் வைரலான வீடியோ முற்றிலும் அரைகுறையானது என்று கூறியுள்ள ஆஸ்தா சிங், கடந்த ஜனவரி மாதம் வங்கியில் பணிபுரியும் சக பெண் ஊழியர் ஒருவரின் கணவர் வங்கிக்கு வந்து, தன்னிடம் மிகத் தவறான முறையில் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த நபர் தனது குர்தாவுக்குள் கையை விட்டு, உடலின் பாகங்களைத் தொட்டுப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாலேயே தான் நிலைகுலைந்து ஆத்திரமடைந்ததாகவும், அதன் பிறகே அங்கு வாக்குவாதம் முற்றி அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் அவர் கண்ணீருடன் விவரித்துள்ளார்.

இருப்பினும், மறுபுறம் சம்பந்தப்பட்ட அந்த நபரின் குடும்பத்தினர் ஆஸ்தா சிங் மீது சாதிய ஆதிக்கத்தைக் காட்டி மிரட்டல் விடுத்ததாகப் பரஸ்பர புகார்களை அள்ளி வீசி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் சில நொடிகள் ஓடும் அரைகுறை வீடியோக்களை மட்டும் பார்த்துவிட்டு ஒருவரைத் தப்பாக எடைபோடக் கூடாது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி என்று நெட்டிசன்கள் கூறி வரும் வேளையில், இந்தப் பாலியல் தொல்லை விவகாரம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.