திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சுண்ணாம்பு மேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான மதிய உணவு சமைப்பதற்காகச் சமையலறையில் சிலிண்டரைப் பயன்படுத்தியபோது, அதில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது.
மேலும் அங்கிருந்த சத்துணவுப் பணியாளர்கள் தீயணைப்பான் கருவியைக் கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தும், அது செயல்படாததால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தீ வேகமாகப் பரவியதைக் கண்ட மாணவர்கள் அச்சமடைந்து அலறியடித்தபடி பள்ளியை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
இந்தச் சூழலில், உடனடியாகச் செயல்பட்ட அப்பகுதி பொதுமக்கள் பள்ளிக்கு விரைந்து வந்து, ஈரமான கோணிப்பைகளைக் கொண்டு தீயை மூடி அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பள்ளியில் பாதுகாப்புக் கருவிகள் முறையாகச் செயல்படாதது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
