உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஸ்கார்பியோ கார் ஒன்றில் துப்பாக்கிக் குண்டுகளுடன் வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தார். போலீஸ் விசாரணையில் அவர் ஹாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த துஷார் தியாகி (25) என்பது தெரியவந்தது. இந்த கொலை வழக்கை 24 மணி நேரத்திற்குள் துப்புதுலக்கிய மீரட் போலீஸார், துஷாரின் தந்தை சுந்தர் தியாகி மற்றும் அவரது நண்பர் அமித் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் எண்களின் கண்காணிப்பு அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீரட் எஸ்பி அபீஜித் குமார் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தந்தை சுந்தர் தியாகி போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது மகன் துஷார் தன்னைத் தீர்த்துக்கட்டுவதற்காக ரூ.10 லட்சம் கூலிப்படைக்கு பணம் கொடுத்திருந்ததாகத் தனக்கு சந்தேகம் இருந்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், தங்களின் பூர்வீக நிலத்தை விற்குமாறு துஷார் குடும்பத்தினரைத் தொடர்ந்து வற்புறுத்தி, அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். நீண்ட நாட்களாக நிலவி வந்த இந்த சொத்துத் தகராறு மற்றும் குடும்பச் சண்டை காரணமாக, ஆத்திரமடைந்த தந்தை தனது நண்பர் அமித்துடன் சேர்ந்து மகனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
