டெல்லி மால்வியா நகரில் உள்ள ‘ஃப்ளோரிஷ் ஸ்டே’ ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட 10 காவல்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 40 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 15 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர். ஹோட்டலின் தரைத்தளத்தில் திடீரெனத் தொடங்கிய தீ, அடுத்தடுத்து வேகமாகப் பரவியுள்ளது. ஹோட்டலுக்குள் கரும்புகை சூழ்ந்ததால், வெளியேற வழியின்றி உள்ளே சிக்கியவர்கள் ஜன்னல்களை உடைத்து, தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மேல் தளங்களில் இருந்து கீழே குதித்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளனர்.
இந்தக் கொடூர விபத்து குறித்து டெல்லி துணைத் தலைமைத் தீயணைப்பு அதிகாரி ஏ.கே. மாலிக் கூறுகையில், விபத்துக்குள்ளான ஹோட்டல் தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழை பெறவில்லை என்றும், அப்பகுதியில் உள்ள பல ஹோட்டல்களும் இதே விதியைத் தான் பின்பற்றி வருகின்றன என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த ஹோட்டலில் முறையான காற்றோட்ட வசதியோ, அவசரகால மற்றும் தனித்தனி நுழைவு, வெளியேறும் வழிகளோ இல்லை. அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை விடக் கூடுதல் அறைகள் கட்டப்பட்டு, கடுமையான விதிமீறல்களுடன் இந்த ஹோட்டல் இயங்கி வந்துள்ளது. தீ பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் அவை முறையாகப் பயன்படுத்தப்படாததே இந்த பெரும் உயிர்ச்சேதத்திற்கு முக்கியக் காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
