கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து அண்ணா கிராமத்தைச் சேர்ந்த 29 வயது தனியார் நிறுவன ஊழியரான ஸ்டீபன் ராஜ் என்பவரது வீட்டில் அரங்கேறியுள்ள நள்ளிரவு கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டே குடும்பத் தகராறில் இவரது மனைவி பவித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஸ்டீபன் ராஜ் தனது 7 வயது மகன் யஷ்வந்த்ராஜுடன் வசித்து வந்துள்ளார். அந்தச் சிறுவன் நாளை பள்ளி திறக்கப்படவிருந்த நிலையில் 3-ம் வகுப்பு செல்லவிருந்தான்.

சம்பவத்தன்று இரவு மகனுக்கு டிபன் கொடுத்துத் தூங்க வைத்த ஸ்டீபன் ராஜ், நள்ளிரவில் திடீரென எழுந்து எதிர்பாராத விதமாகப் பெத்த மகன் என்றும் பாராமல் அவனது கழுத்தை கத்தியால் கொடூரமாக அறுத்துத் துடிதுடிக்கக் கொலை செய்துள்ளார். பின்னர், கடுமையான விரக்தியில் சமையல் அறைக்குச் சென்று அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தத் தற்கொலைச் சம்பவத்திற்கு முன்பாக அவர் தனது சகோதரிக்கு வாட்ஸ்-அப் மூலம் ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இன்று அதிகாலை அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடிவந்த உறவினர்கள், சிறுவன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதையும், ஸ்டீபன் ராஜ் சமையலறையில் தூக்கில் தொங்குவதையும் கண்டு கதறி அழுது போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெய்வேலி நகரப் போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றிக் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.