“அமெரிக்காவில் அடுத்த அதிரடி மாஸ் ட்விஸ்ட்.! உளவுத்துறை அனுபவமே இல்லாத பில் புல்டேவை நாட்டின் புதிய தேசிய உளவுத்துறை தற்காலிக இயக்குநராக (DNI) நியமித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய இயக்குநர் துளசி கபார்டின் பதவிக்காலம் ஜூன் 30-டன் முடிவடைவதை அடுத்து, பில் புல்டே இந்த டாப் பதவியை ஏற்கவுள்ளார். பிரபல ‘புல்டேகுரூப்’ வீட்டுவசதி நிறுவனத்தைத் தொடங்கிய தொழில் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவரான புல்டே, தற்போது பெடரல் ஹவுசிங் பைனான்ஸ் ஏஜென்சியின் (FHFA) இயக்குநராகவும் இருந்து வருகிறார்.
உளவுத்துறையிலோ அல்லது தேசிய பாதுகாப்பிலோ துளிகூட அனுபவம் இல்லாத இவரை, 18 உளவு அமைப்புகளைக் கண்காணிக்கும் மிக உயரிய பதவியில் டிரம்ப் அமரவைத்துள்ளது அமெரிக்கா முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
செனட் சபையின் கடுமையான அக்னிப்பரீட்சைக்குப் பிறகே இவரது நியமனம் நிரந்தரமாகும் என்ற சூழலில், ‘டிரம்பின் தீவிர விசுவாசி’ என்ற ஒரே தகுதிக்காகவே இந்த சீட் இவருக்குக் கிடைத்துள்ளதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
டிரம்பைப் போலவே சமூக வலைதளங்களில் எதிரிகளைப் போட்டுத் தாக்குவது, அமெரிக்க மத்திய வங்கித் தலைவரையே பொதுவெளியில் வம்புக்கு இழுப்பது, பாரம்பரிய நடைமுறைகளை மதிக்காமல் கிரிப்டோகரன்சியைக் கடன் விதிமுறைகளில் புகுத்த நினைப்பது எனப் பல அதிரடி ஆட்டங்களால் இவரை எல்லாரும் செல்லமாக ‘சின்ன டிரம்ப்’ என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
டிரம்ப் மீதான விசுவாசத்தால், அரசுப் பதவிகளில் இருக்கும் டிரம்பின் எதிரிகளை ஒட்டுமொத்தமாகக் காலி செய்யத் துடிக்கும் புல்டே, ஏற்கனவே FHFA அமைப்பில் பல உயர் அதிகாரிகளைத் தூக்கியடித்துள்ளார்.
மேலும், லிசா குக், லெட்டிஷியா ஜேம்ஸ் போன்ற பல முக்கிய அரசியல் தலைவர்கள் மீது அடமான மோசடிப் புகார்களை அள்ளி வீசி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதனால், உளவுத்துறையை டிரம்ப் தனது அரசியல் ஆதாயத்துக்கான கருவியாக மாற்றப் பார்க்கிறார் என ஜனநாயகக் கட்சி செனட்டர் மார்க் வார்னர் கொதிப்படைந்துள்ளதோடு, ஜான் தூன், சூசன் காலின்ஸ் போன்ற பல குடியரசுக் கட்சித் தலைவர்களுமே புல்டேவின் தகுதி குறித்து பகிரங்கமாகக் கேள்வி எழுப்பி வருவது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.”
