உலகையே அச்சுறுத்தி வரும் டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற கொடிய நோய்களைக் கட்டுப்படுத்த, உலக புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google) ஒரு விசித்திரமான மற்றும் அதிரடி அறிவியல் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான ‘ஆல்பாபெட்’ அமைப்பின் கீழ் செயல்படும் லைஃப் சயின்ஸ் பிரிவு, ‘டிபக்’ (Debug) என்ற திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் சுமார் 3 கோடியே 20 லட்சம் கொசுக்களைத் திறந்து விட அனுமதி கோரியுள்ளது. அதிநவீன பயோடெக்னாலஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆய்வகங்களில் ‘வொல்பாக்கியா’ என்ற இயற்கையான பாக்டீரியா மூலம் பாதிக்கப்பட்ட ஏடிஸ் ரக ஆண் கொசுக்கள் இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

அறிவியல் முறைப்படி மனிதர்களை பெண் கொசுக்கள் மட்டுமே கடிக்கும் என்பதால், இந்த ஆண் கொசுக்களால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இந்த பாக்டீரியா பாதித்த ஆண் கொசுக்கள் காடுகளில் உள்ள பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்போது, அவற்றால் அடுத்த தலைமுறைக்கான முட்டைகளை உருவாக்க முடியாது. இதனால் கொசுக்களின் எண்ணிக்கை இயற்கையாகவே முற்றிலும் அழிந்துவிடும். தற்போது பயன்படுத்தப்படும் கொசு மருந்து தெளிக்கும் முறைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாலும், கொசுக்கள் அதற்குப் பழகிவிட்டதாலும் இந்த புதிய இயற்கை முறையை கூகுள் தேர்ந்தெடுத்துள்ளது. ஏற்கனவே சிங்கப்பூரில் இந்த சோதனையை நடத்தி 70% வெற்றிக்கண்ட கூகுள் நிறுவனம், தற்போது அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையிடம்  அனுமதி கேட்டுள்ளது. இதுகுறித்து ஜூன் 5-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.