டெல்லியின் மால்வியா நகர், ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள ‘லெமன் கிரீன் இன்’ விடுதியில் புதன்கிழமை காலை 8:50 மணியளவில் ஏற்பட்ட படுபயங்கர தீ விபத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.

அடித்தளத்தில் உள்ள உணவகத்தில் முதலில் பற்றிய தீ, கண் இமைக்கும் நேரத்தில் 5 மாடிகளைக் கொண்ட கட்டிடம் முழுவதும் பரவி கரும்புகையாகச் சூழ்ந்ததில், இதுவரை 21 பேர் மூச்சுத்திணறியும் தீக்காயமடைந்தும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அருகில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு வந்த கென்யா உள்ளிட்ட வெளிநாட்டு நோயாளிகளின் உதவியாளர்களே இந்த விடுதியில் அதிகம் தங்கியிருந்த நிலையில், தப்பிச் செல்ல இருந்த ஒரேயொரு குறுகிய படிக்கட்டுப் பகுதியிலும் தீப்பிடித்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

தப்ப வழியின்றி ஜன்னல் வழியே மக்கள் கீழே குதித்ததும், குளியலறைக்குள் தஞ்சமடைந்த பலரது உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் மீட்கப்பட்டதும் பார்ப்போர் நெஞ்சங்களை உலுக்கியுள்ளது. டெல்லி அரசிடம் வெறும் 6 அறைகளை இயக்குவதற்கு மட்டுமே அனுமதி பெற்றுக்கொண்டு, பேராசையால் விதிகளை மீறி அடித்தளம் உட்பட 25 அறைகளைக் கட்டி, இந்த விடுதியை மரணப் பொறியாக மாற்றியுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 10 வாகனங்களுடன் பல மணி நேரம் போராடி 37 பேரை மீட்ட நிலையில், காயமடைந்த 11 பேர் எய்ம்ஸ் மற்றும் மேக்ஸ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரும் துயரத்திற்குப் பின்னுள்ள மின்சாரக் கசிவு உள்ளிட்ட தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் கட்டிட விதிமீறல்கள் குறித்து விரிவான விசாரணைக்கு மாவட்ட நீதிபதி (SDM) ஜிதேந்திர குமார் தற்போது உத்தரவிட்டுள்ளார்.