மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்த, ‘ஹுஸைபா’ என்ற பயங்கரவாதியை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் டெல்லி போலீசாரின் ‘சிறப்புப் பிரிவும்’ இணைந்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாகத் தலைமறைவாக இருந்த இவனைப் பிடிக்க ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிலும் கடந்த 3 நாட்களாகத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. ரயில்வே நிர்வாகம் அண்மையில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்குப் பழிவாங்கும் நோக்கில், இந்த நாச வேலைக்குத் திட்டமிடப்பட்டதாகப் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சதியின் பின்னணியில் பாகிஸ்தானின் ‘ஐஎஸ்ஐ’ (ISI) உளவு அமைப்பும், பாதாள உலக தாதாக்களும் இருப்பது அம்பலமாகியுள்ளது. கைதான ஹுஸைபா, பாகிஸ்தானின் கராச்சியில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிமின் மிக நெருங்கிய கூட்டாளியான சையத் முதஸிர் ஹுசைன் (என்ற) ‘முன்னா ஜிங்கடா’ என்பவனுடன் தொடர்பில் இருந்துள்ளான். இந்தியாவில் அசம்பாவிதங்களை நிகழ்த்த உள்ளூர் ரவுடிகளைத் திரட்டுவது, இளைஞர்களைத் தூண்டிவிடுவது மற்றும் ஹவாலா நெட்வொர்க் மூலம் பணப் பரிமாற்றம் செய்வது போன்ற பொறுப்புகள் இவனுக்கு வழங்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவனுடன் தொடர்பில் இருந்த மற்ற ‘ஸ்லீப்பர் செல்’ உறுப்பினர்கள் யார் யார் என்பது குறித்துப் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
