பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள முசல்லாபூர் ஹாட் பகுதியில், புகழ்பெற்ற ஆசிரியரும் பிரபல யூடியூபருமான ‘கான் சார்’ நடத்தி வரும் பயிற்சி மையத்தின் வெளியே செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு காவலர் ஒருவர் படுகாயமடைந்து, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பேசிய கான் சார், “ஏழை மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கி, அதிக அளவில் தேர்ச்சிகளைப் பெற்றுத் தருவதால், அக்கம் பக்கத்தில் உள்ள போட்டி கல்வி நிறுவனங்கள் என் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். குறைவான கட்டணத்தில் ஏன் சொல்லித் தருகிறீர்கள் எனக் கேட்டு, எங்கள் மையத்தை வெடிவைத்து தகர்க்கப் போவதாகவும் அவர்கள் ஏற்கனவே பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
#WATCH | Patna, Bihar: Educator Khan Sir says, “… The main issue seems to be that why are we teaching for such low fees? Why are we getting such massive results? We appeal to the administration to keep security concerns in mind, recognizing that the poor, too, have the right to… https://t.co/5fSeoroGWH pic.twitter.com/wwxRMZCyxl
— ANI (@ANI) June 2, 2026
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னால் உள்ளூர் கோச்சிங் சென்டர்களின் வியாபாரப் போட்டியும், ஆதிக்கமுமே முக்கியக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏழை மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க அரசு தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கான் சார் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், இந்தத் துப்பாக்கிச்சூடு தொடர்பாகப் பேசிய பாட்னா காவல் கண்காணிப்பாளர் (SP) தீக்ஷா, சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
