மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில் தனது ஹெலிகாப்டர் ஓட்டுநர் பயிற்சி நிறைவு விழாவை முடித்த கையோடு, இளம் ராணுவ அதிகாரி ஒருவர் தனது காதலிக்குத் திருமண விருப்பம் (Proposal) தெரிவித்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேப்டன் பாரத் பரத்வாஜ் என்ற அந்த இளம் அதிகாரி, தனது கடினமான போர் ஹெலிகாப்டர் ஓட்டுநர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து அதிகாரப்பூர்வமாகப் பட்டம் பெற்றார்.

இந்தச் சாதனையைக் கொண்டாடும் போது, அங்கு வந்திருந்த சக அதிகாரிகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், பின்னணியில் ராணுவ ஹெலிகாப்டர் நிற்க, தனது நீண்ட நாள் காதலியான ஆருஷிக்கு மோதிரம் அணிவித்து தனது காதலை வெளிப்படுத்தினார். எதிர்பாராத இந்த நெகிழ்ச்சியான தருணத்தால் உணர்ச்சிவசப்பட்ட ஆருஷி, உடனடியாக அவரது காதலை ஏற்றுக்கொண்டார்.

ராணுவச் சீருடையில் காதலிக்கு ‘லவ் சல்யூட்’ அடித்த இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், கேப்டன் பாரத் பரத்வாஜ் தனது திருமண வாழ்க்கை குறித்து நகைச்சுவையாகப் பேசியுள்ளார். “ராணுவத்தில் சீருடை அணிந்து நாங்கள் ஒருவருக்கொருவர் சல்யூட் அடித்துக் கொண்டாலும், வீட்டில் எப்போதும் மனைவியின் அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகும்” என்று அவர் ஜாலியாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மிகக் கடினமான பயிற்சிகளைக் கொடுக்கும் இந்தியாவின் முதன்மை ராணுவப் பயிற்சி நிறுவனமான நாசிக் பள்ளியில், நாட்டின் பாதுகாப்பிற்கான கடமையையும், சொந்த வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் அழகாக சமன் செய்த இந்த இளம் ஜோடியை நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.