நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அடுத்தடுத்து இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், 3 வயது சிறுமி மற்றும் 12 வயது சிறுமி ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆவார். இந்த சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் நடந்த தனித்தனியான நிகழ்வுகள் என்றும், ஒரே சம்பவம் என்பது போன்ற தகவல் தவறானது என்றும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
முதலில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (59) என்பவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அதேபோல் மற்றொரு சம்பவத்தில், 12 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மணி (62) என்ற முதியவரையும் பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த இரு தனித்தனி வழக்குகளிலும் குமாரபாளையம் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளதோடு, அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
