தமிழக அரசியல் களம் தற்போது பல அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அண்ணாமலையின் திடீர் டெல்லி பயணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டெல்லி புறப்படும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, இன்னும் இரண்டு நாட்களில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்வேன் என்று கூறிவிட்டு டெல்லிக்குச் சென்றுள்ளார்.

டெல்லியில் நாளை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பின் போது பாஜகவுடன் சமரசம் செய்து கொள்வதா அல்லது தனிக்கட்சி தொடங்குவதா என்பது குறித்து அவர் இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு மற்றும் அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்பதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.