உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் (Firozabad) மாவட்டத்தில், திருமணப்Proposal-ஐ பெண் மறுத்ததால் 2 வயது பிஞ்சு குழந்தை ஆரவ் என்பவரை நடுரோட்டில் 8 முறைக்கும் மேலாகத் தரையில் தூக்கி வீசி கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனது தாயார் வீட்டில் வசித்து வந்த ஆசிரியை ரதி தேவிக்கு, அவரது கணவரின் உறவினரான விராஜ் என்ற ஜிதேந்திர பதக் என்பவர் விவாகரத்து வழக்கில் உதவி செய்து வந்துள்ளார்.

இந்த பழக்கத்தைப் பயன்படுத்தி ரதியைத் திருமணம் செய்ய விராஜ் வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரதியும் அவரது தாயாரும் இந்தத் திருமணப் பேச்சை திட்டவட்டமாக மறுத்து வந்துள்ளனர். சனிக்கிழமையன்று வக்கீலைச் சந்திக்க ஷிகோஹாபாத் வந்த ரதியைத் பின்தொடர்ந்த விராஜ், மீண்டும் திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். ரதி மறுத்ததால் ஆத்திரமடைந்த விராஜ், 2 வயது குழந்தை ஆரவை சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி வெளியே அழைத்துச் சென்று, ஒரு ஆள்நடமாட்டமற்ற பகுதியில் வைத்து கொடூரமாகத் தரையில் பலமுறை தூக்கி வீசிவிட்டு தப்பியோடியுள்ளார். சிசிடிவி-யில் பதிவாகியுள்ள இந்த கொடூரக் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

​படுகாயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஷிகோஹாபாத் போலீஸார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 103(1)-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். குற்றவாளியைப் பிடிக்க எஸ்பி ரவி சங்கர் பிரசாத் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. மெயின்புரி சாலை (Mainpuri Road) அருகே கொலையாளி விராஜ் தப்பியோட முயன்றபோது, போலீஸார் அவரை வளைத்துப் பிடித்தனர்.

அப்போது போலீஸாரை நோக்கி விராஜ் துப்பாக்கியால் சுட, போலீஸாரும் தற்காப்பிற்காகப் பதில் சுட்டதில் விராஜின் காலில் தோட்டா பாய்ந்து அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். தற்போது காலில் காயமடைந்த கொலையாளிக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் காவலுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடூரக் கொலை குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.