ஐபிஎல் 2026 தகுதிச்சுற்று 2 (Qualifier 2) போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியின் கேப்டனும் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில் அதிரடியாக விளையாடி, 53 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்து அசத்தினார்.
இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய சாய் சுதர்சனும் தன் பங்குக்கு 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 167 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை ஏறத்தாழ உறுதி செய்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் மோதவுள்ளது.
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசி பல்வேறு சாதனைகளைப் படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் (440 பந்துகள்) 1,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற ஆண்ட்ரே ரஸலின் சாதனையை முறியடித்ததுடன், ஒரே ஐபிஎல் சீசனில் பவர்பிளேயில் 500 ரன்களைக் கடந்த முதல் பேட்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இருப்பினும், 215 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியின் கில் மற்றும் சாய் சுதர்சன் கூட்டணியை ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இவர்களின் ஆட்டத்தைப் பாராட்டிய ஆர். அஸ்வின், “ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே 19 ரன்கள் சென்றபோதே ஆட்டம் கைமீறிவிட்டது; கில் மற்றும் சாய் சுதர்சன் போன்ற வீரர்களுக்கு ஆரம்பத்திலேயே ரன்களை விட்டுக் கொடுத்தால் மீள்வது கடினம் அவர்கள் உங்களை சின்னாபின்னம் ஆக்கி விடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
