ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் டி20 தகுதிச்சுற்று ஆட்டத்தில், சீனாவின் பந்துவீச்சை துவம்சம் செய்த நேபாள அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் பூர்டெல் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். சீன சுழற்பந்து வீச்சாளர் சென் ஜுவோ யுவே வீசிய ஓவரில் இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திய பூர்டெல், ஒட்டுமொத்தமாக 43 பந்துகளில் 16 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் குவித்து மிரட்டினார்.

https://x.com/pawansigdel777/status/2060929036805919109?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2060929036805919109%7Ctwgr%5E08288066465bde383e268f14e2d749fdf7ba5fd2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-18652460483402914726.ampproject.net%2F2605071401000%2Fframe.html

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங், கீரன் பொல்லார்ட் உள்ளிட்ட ஜாம்பவான்களின் வரிசையில், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த 5-ஆவது பேட்டர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

குஷால் பூர்டெலின் அதிரடியோடு, ரோஹித் பௌடெல் (69 ரன்கள்), குஷால் மல்லா (85 ரன்கள்) ஆகியோரின் ஆட்டமும் இணைய, நேபாள அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை எட்டியது. தொடர்ந்து ஆடிய சீன அணியை சுருட்டி 221 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே 2023-இல் மங்கோலியாவுக்கு எதிராக 314 ரன்கள் குவித்திருந்த நேபாள அணி, தற்போது மீண்டும் 300 ரன்களைக் கடந்து, சர்வதேச டி20 வரலாற்றில் இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற வரலாற்றுப் பெருமையையும், அசுர சாதனையும் படைத்துள்ளது.