ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 215 ரன்கள் இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தது. ஓப்பனிங் ஜோடியான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் பார்ட்னர்ஷிப் 167 ரன்களைக் கடந்திருந்தபோது, யாரும் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் நடந்தது. 58 ரன்கள் எடுத்திருந்த சாய் சுதர்சன், பவுண்டரி அடிக்க முயன்றபோது கையை விட்டு நழுவிய பேட், நேராகப் போய் பின்னால் இருந்த ஸ்டம்பைத் தாக்கியது.
இதை ‘நான்-ஸ்டிரைக்கர்’ எண்டில் இருந்து பார்த்த கேப்டன் சுப்மன் கில் அதிர்ச்சியில் மைதானத்திலேயே மண்டியிட்டு தலையில் கையை வைத்தார். அந்த அளவுக்கு இந்த விசித்திரமான அவுட் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளது. விஷயம் என்னவென்றால், சாய் சுதர்சன் இப்படி ஹிட்-விக்கெட் ஆகி அவுட்டாவது இது முதல் முறையல்ல; பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த குவாலிஃபையர் 1 போட்டியிலும் இதேபோல் பேட்டை பறக்கவிட்டுத்தான் அவுட்டானார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அடுத்தடுத்த போட்டிகளில் ‘ஹிட்-விக்கெட்’ ஆன முதல் வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 3 முறை இப்படி அவுட்டான ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை சாய் சுதர்சன் படைத்துள்ளார்.
Best gift for Sai Sudarshan pic.twitter.com/lnrhs1jXO7
— Sagar (@sagarcasm) May 29, 2026
இதனால் கடுப்பான ரசிகர்கள், “அடுத்த மேட்சுக்குப் போறதுக்கு முன்னாடி சாய் சுதர்சனுக்கு ஒரு டப்பா ‘ஃபெவிகால்’ வாங்கி கொடுங்கப்பா, அப்படியாவது பேட் கையை விட்டு நழுவாமல் ஒட்டிக்கொண்டிருக்கட்டும்” என சோஷியல் மீடியாவில் மீம்ஸ்களை அள்ளித் தெளித்து வறுத்தெடுத்து வருகின்றனர். இருப்பினும், குஜராத் அணி இந்த மேட்சை ஜெயித்து ஃபைனலுக்குள் நுழைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
