பாகிஸ்தானும் ஈரானும் 909 கிலோமீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகளாகும். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தைத் தணித்து, அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இறுதி வரைவு தயாரிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவை முழுமையாக நம்ப முடியாது என்று ஈரான் கூறுவதால், இந்த ஒப்பந்தத்திற்குப் பாகிஸ்தானை ஒரு “உத்தரவாத நாடாக” மாற்றுவதற்கு அமெரிக்கா மற்றும் கத்தார் போன்ற நாடுகள் உடன்பாட்டிற்கு வந்துள்ளன.
அணு ஆயுதம் ஏந்திய நாடான பாகிஸ்தானால் ஈரான் மீது அழுத்தத்தைக் கொடுக்க முடியும் என்பதும், ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை ரகசியமாக மீண்டும் தொடங்கினால் அண்டை நாடான பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவால் அதை எளிதில் கண்டறிய முடியும் என்பதும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய யுக்தியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அமைதி ஒப்பந்தம் இரண்டு கட்டங்களாக எட்டப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது; முதலாவதாக ஓர் இடைக்கால ஒப்பந்தமும், அதனைத் தொடர்ந்து 60 நாட்களுக்குப் பிறகு இறுதி ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம்.
பாகிஸ்தானை இந்த ஒப்பந்தத்தில் இணைப்பதன் மூலம் சவூதி அரேபியா, துருக்கி, கத்தார் போன்ற மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் நம்பிக்கையைப் பெற அமெரிக்கா முயற்சிக்கிறது. மேலும், சீனா மற்றும் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஜாமீன்தாரராக மாறினால் எதிர்காலத்தில் அமெரிக்காவால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போகலாம் என்பதால், அமெரிக்கா பாகிஸ்தானைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இதுதவிர, சீனாவுக்கு மிக அருகில் உள்ள பர்காம் தளத்தைக் கண்காணிப்பதற்கும், தெற்காசியாவில் உள்ள தலிபான் அமைப்புகளைக் கையாளுவதற்கும் பாகிஸ்தானின் ஆதரவு அமெரிக்காவிற்குத் தேவைப்படுகிறது.
