சமூக ஊடக பிரபலமான பிக்பாஸ் ஜூலி, தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிட்னி விற்றுத் தருவதாகக் கூறி தாம் ரூ.15 லட்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று கண்ணீர் மல்க மறுத்தார்.

இந்த விவகாரத்தில் தனக்கோ அல்லது தனது கணவருக்கோ எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எதிராகத் தான் தேர்தல் பிரச்சாரம் செய்த ஒரே காரணத்திற்காகவே, சில அரசியல் பின்னணி கொண்ட கும்பல் தனக்கு எதிராக இத்தகைய அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும் அவர் பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜூலி, இந்தத் தொடர் அவதூறுகளால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தனது வயிற்றில் வளர்ந்த குழந்தை கருவிலேயே கலைந்துவிட்டதாகக் கூறி கதறி அழுதார். “இதை நான் நாடகமாடுகிறேன் என்று நினைத்தாலும் பரவாயில்லை; அண்மையில்தான் எனக்குத் திருமணம் நடந்தது, கடந்த மார்ச் மாதமே இதுகுறித்து புகார் அளிக்க வந்தேன், ஆனால் அதற்குள் என் குழந்தையை இழந்துவிட்டேன்” என உருக்கமாகத் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.