“தேர்தல் பிரசாரத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழிய பஞ்ச் டயலாக் பேசியவர், முதலமைச்சர் ஆனதும் ‘டீப் ஸ்லீப் மோடுக்கு’ போய்விட்டார்” என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய் மீது மிகக் கடுமையான அனல் பறக்கும் தாக்குதலைத் தொடுத்துள்ளார். கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அவர் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்புக்காகத் தவெக அரசு அறிவித்த ‘சிங்கப்பெண்கள் படை’ பிரிவின் தொடக்க விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதை உதயநிதி ஸ்டாலின் பயங்கரமாகச் சாடியுள்ளார். “நிகழ்ச்சியைத் தள்ளி வைத்துள்ளீர்களா, இல்லை அந்த முயற்சியையே கைவிட்டு விட்டீர்களா என்று மக்கள் கேட்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், வெறும் பேரையும் சீருடையையும் மாற்றுவதுதான் மாற்றமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “நீங்கள் டைம் எடுத்து, சட்டம் ஒழுங்கைக் கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார்!” என்று முதலமைச்சர் விஜய்க்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் மிகக் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
