தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கட்சிக்கு நீண்டகாலமாக உழைத்தவர்களையும், வெற்றி வாய்ப்பு உள்ளவர்களையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்களுக்கும் தகுதியற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், வாய்ப்புப் பெற்ற சிலர் தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே கட்சியை விட்டு விலகியுள்ளனர். இந்தத் தவறுகளுக்குக் காரணமான தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கமிட்டி மீது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான் விதிமுறைப்படி விசாரணை நடத்த வேண்டுமே தவிர, மாநிலப் பொறுப்பாளர்கள் விசாரிக்க முடியாது என்றும், தற்போது அமைக்கப்பட்டுள்ள கமிட்டி தவறு செய்தவர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே என்றும் சாடப்பட்டுள்ளது.
<a href="http://

“>

பல்வேறு மாநிலத் தேர்தல்களில் இதுபோன்ற தவறான வேட்பாளர் தேர்வே கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைவதாகவும், இவ்வளவு வெளிப்படையாகத் தவறுகள் நடப்பது கட்சியின் எதிர்காலத்திற்குப் பெரிய பின்னடைவு என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டை நரேந்திர மோடியிடமிருந்து காப்பாற்ற ராகுல் காந்தி எவ்வித சமரசமும் இன்றிப் போராடி வரும் வேளையில், கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற ஊழல்கள் தொண்டர்களின் நம்பிக்கையைக் குலைப்பதாக உள்ளது.

காங்கிரஸ் கட்சி ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக வெற்றிபெற வேண்டுமானால், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் குரலுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சிக்குள் செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தம் தமிழ்நாட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.