திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சண்முகவிலாச மண்டபம் வாயிலில் பக்தர் ஒருவரிடம் 1,000 ரூபாய் பணம் பெற்ற அர்ச்சகர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த இரண்டு வாயிற்காவலர்கள் (Securities) நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

​பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த அர்ச்சகர், இனிமேல் கோவிலுக்குள் நுழைந்து எந்தவொரு பணியும் செய்யக் கூடாது எனத் தடை விதித்துத் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, திருச்செந்தூர் கோவிலில் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டாயப்படுத்திப் பணம் கேட்ட புகாரில் மேலும் இரண்டு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் அத்துமீறிப் பணம் பறிப்பவர்கள் மீது இரக்கமில்லாமல் கடுமையான நடவடிக்கை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.