திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழை காரணமாக, நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் அதிகப்படியான மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்தவுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அய்யனார் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
மேலும், தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற பேரூராட்சி அலுவலக அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தார். இருப்பினும், நீண்ட நேரமாகியும் பேரூராட்சி ஊழியர்கள் யாரும் சம்பவ இடத்திற்கு வராததால் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ அய்யனார், தனது பதவி பந்தாவைப் பார்க்காமல் நேரடியாகவே களத்தில் இறங்கினார். அவரே முன்னின்று மழைநீர் வெளியேறுவதற்கான வழிபாதையையும், அடைப்புகளையும் சரிசெய்து தண்ணீரை வடிய வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தவெக MLA🫡 pic.twitter.com/A2jWumviKy
— priya (@PriyankaSmile01) May 28, 2026
ஒரு சட்டமன்ற உறுப்பினரே நேரடியாக களத்தில் இறங்கி சாக்கடை அடைப்பை நீக்கி மக்கள் பணியில் ஈடுபட்ட இந்தச் செயலைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் சமூக வலைத்தள வாசகர்கள் தவெக எம்.எல்.ஏ அய்யனாருக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
