நடப்பு ஐபிஎல் தொடரில், 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். சமீபத்திய போட்டியில் வெறும் 29 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து மிரட்டியுள்ளார். இந்த சீசனில் மட்டும் 65 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, இதற்கு முன் கிறிஸ் கெயில் (59 சிக்ஸர்கள்) வைத்திருந்த வரலாற்றுச் சாதனையை வைபவ் தகர்த்துள்ளார். இந்த அசுரத்தனமான ஃபார்மால், கொல்கத்தா அணியின் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசலே இவருக்கு ரசிகராக மாறியுள்ளார்.

​சமூக வலைத்தளங்களில் வைபவ்வின் உண்மையான வயது குறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வரும் நிலையில், ரசல் இவருக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாழ்த்துகள் தம்பி! உன்னை பிடிக்காதவர்கள் உனக்கு 15 வயதில்லை என்றுதான் சொல்வார்கள், அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? 30 வயது வீரர்கள் செய்ய நினைப்பதை நீ இந்த சிறிய வயதில் செய்து காட்டியிருக்கிறாய். உன்னுடைய வயதை விமர்சிப்பவர்களைக் கண்டு கொள்ளாமல், பந்தைப் பார்த்து அடித்துக்கொண்டே இரு, நான் உன்னுடைய ரசிகன்” என ரசல் வைபவ்விற்கு அட்வைஸ் கொடுத்து தட்டிக்கொடுத்துள்ளார்.