அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்களது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து அவர்கள் அளித்த ராஜினாமா கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பதவியை ராஜினாமா செய்த கையோடு அவர்கள் தங்களை முதலமைச்சர் விஜய்யின் த.வெ.க கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், த.வெ.க சார்பில் இவர்களே மீண்டும் அங்கு போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக எம்.எல்.ஏ-க்களின் இந்த அதிரடி கட்சித் தாவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எம்.ஜி.ஆரின் மரபை முடிவுக்குக் கொண்டு வர முதலமைச்சர் விஜய் முயல்வதாக அதிமுக எம்.பி இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசியல் என்பது எம்.ஜி.ஆர் மரபுக்கும் விஜய் மரபுக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ-க்களை இழுத்து எடப்பாடியாரைப் பலவீனமாக்கி, எம்.ஜி.ஆரின் பாரம்பரியத்தை அழிக்க விஜய் முயல்வதாகவும், ஆனால் இந்த யுத்தத்தின் இறுதியில் எம்.ஜி.ஆரே வெல்வார் என்றும் இன்பதுரை சவாலாகத் தெரிவித்துள்ளார்.