தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கூறி, ஆளும் அரசின் மெத்தனப் போக்கையும் தமிழக வெற்றிக் கழகத்தினரின் (தவெக) அராஜகத்தையும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகக் கண்டித்துள்ளார். தூத்துக்குடி அருகே வேன் ஓட்டுநர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகிகளைக் கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் போராடி வரும் அவலம் நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி வருவதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் வேதனை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையைத் தொடர்ந்து, தற்போது சேலம் எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மின்வாரிய அரசு ஊழியர் சீரங்கன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் தற்போது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டது என்று சாடியுள்ள நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி கொலை வழக்கில் தொடர்புடைய தவெக நிர்வாகிகள் மற்றும் சிறுமிகளைச் சீரழித்த கயவர்கள் மீது காவல்துறை எவ்வித அரசியல் தலையீடுமின்றி இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
