திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் விஜய், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விரைவில் திருச்சிக்கு வரவுள்ளதாகத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்துப் பேசிய அவர், தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவரே கட்சியின் பொதுச் செயலாளராக இருக்க முடியும் என்பதால், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் கிடையாது என்று விமர்சித்துள்ளார்.

மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது என்பது தனிநபர்களின் சொந்த விருப்பம் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறிய அவர், தற்போது மாற்றுக்கட்சிகளில் இருந்து தவெகவில் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ சீட்டு வழங்கப்படுமா என்பதைத் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.