டெல்லி, ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள மசாஜ் பார்லர்கள் மற்றும் இசைக்குழுக்களில் சிறுமிகள் கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டு, பாலியல் ரீதியாகச் சுரண்டப்படும் விவகாரம் மிகவும் தீவிரமானது என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

ஒரு தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, நேற்று‌ முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2025 மார்ச் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் பீகார், மேற்கு வங்கம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வறுமையில் வாடும் பழங்குடி மற்றும் விளிம்புநிலை குடும்பங்களைச் சேர்ந்த 10 முதல் 16 வயது வரையிலான சிறுமிகள், வேலை மற்றும் திருமண ஆசை காட்டி ஏமாற்றிக் கடத்தப்படுவதாகவும், பல வழக்குகளில் பெற்றோரின் கடனை அடைக்கச் சிறுமிகள் விற்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி, குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் ஒரு மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தொழிலாக உருவெடுத்துள்ளது என்று மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்த விவகாரம் குழந்தைகளின் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும் என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவிட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை பதிலளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.