அமெரிக்காவில் இந்தியத் தம்பதியினர் இருவர், அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் எவ்வித காரணமுமின்றி இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எக்ஸ்’ (X) தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவில், காரின் உள்ளே அமர்ந்திருக்கும் நபர் ஒருவர், அங்கிருந்த இந்தியத் தம்பதியிடம் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களா என்று கேட்கிறார்.
தொடர்ந்து, “இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில் எது சிறந்த நாடு?” என அவர் கேள்வி எழுப்ப, அதற்கு அந்த இந்தியக் கணவர், “இரண்டு நாடுகளுமே சிறந்தவைதான், எங்களது குடும்பத்தினர் இந்தியாவில் வசிக்கிறார்கள்” என்று மிகவும் பக்குவமாகப் பதிலளிக்கிறார்.
I encountered some incredible H-1B indians, and I had to let them know something! pic.twitter.com/Qi8FyfcjzF
— tone (@AyTone4th) May 20, 2026
அதற்கு அந்த அமெரிக்க நபர், “இந்தியா அவ்வளவு சிறப்பான நாடு என்றால் நீங்கள் ஏன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்?” என்று கேட்க, “உலகைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்தோம்” என்று அத்தம்பதியினர் பதிலளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், “நீங்கள் இங்கு இருக்க எங்களுக்கு விருப்பமில்லை; உடனே உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறி அத்தம்பதியினரை நோக்கி ஆபாச வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்.
இந்தச் சம்பவம் நடைபெற்ற தேதி மற்றும் இடம் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், இணையவாசிகள் பலரும் அந்த அமெரிக்க நபரின் அறியாமையைக் கண்டித்து தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தியர்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்கு வந்து முறைப்படி வரி செலுத்தி வாழும் நிலையில், இத்தகைய இனவெறித் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
