கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்கா – ஈரான் இடையே அறிவிக்கப்பட்ட தற்காலிக சண்டை நிறுத்தம், ஒரே இரவில் தவிடுபொடியாகி மீண்டும் உலகப்போர் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்க ராணுவம் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் இருந்த படகுகள் மொத்தமாக தரைமட்டமாக்கப்பட்டன. தற்காப்புக்காகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா கூறினாலும், “இது அப்பட்டமான நம்பிக்கை துரோகம்” என ஈரான் வெளியுறவுத்துறை கடுமையாக சாடியுள்ளது.
அதற்குப் பதிலடியாக, ஈரானின் வான்வெளிக்குள் நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன எம்.க்யூ-9 டிரோனை சுட்டு வீழ்த்தியதோடு, எப்-35 போர் விமானத்தின் மீதும் தாக்குதல் நடத்தி அமெரிக்காவுக்கு ஈரான் மரண பயத்தைக் காட்டியுள்ளது. மறுபுறம், இந்த சண்டை நிறுத்த உடன்படிக்கையை மீறி, லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் கொடூரமான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான குண்டுமழையில், 4 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 31 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் “லெபனான் மீது கை வைக்கக்கூடாது” என ஈரான் போட்ட முக்கிய நிபந்தனையை இஸ்ரேல் உடைத்தெறிந்துள்ளதால், ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பகுதியும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடிய எரிமலையாக மாறியுள்ளது.
