ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக களம் கண்ட குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு  அதிர்ஷ்டம் முற்றிலும் கைவிட்டதோடு, படுதோல்வியையும் பரிசாகக் கொடுத்துள்ளது.

இப்போட்டியில் 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியின் இன்னிங்ஸில், மூன்றாவது ஓவரிலேயே ஐபிஎல் வரலாற்றிலேயே யாரும் பார்த்திராத ஒரு விசித்திரமான விக்கெட் விழுந்தது. ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி வீசிய லென்த் பந்தை ஆஃப் சைடில் கட் ஷாட் அடித்த குஜராத் தொடக்க வீரர் சாய் சுதர்சன், பந்து பேட்டில் பட்ட அடுத்த கணமே ரன் ஓடத் தொடங்கினார்.

ஆனால், அவர் அடித்த ஷாட்டின் வேகத்தில் மட்டை கைகளில் இருந்து நழுவி, பின்னோக்கிப் பறந்து சென்று ஸ்டம்புகளைத் தாக்கியதில் பெயில்ஸ்கள் கீழே விழுந்தன. பந்து பவுண்டரி லைனை நோக்கி ஓடிக்கொண்டிருக்க, சாய் சுதர்சன் எதிர்முனையை நோக்கி ஓடியபோது திரும்பிப் பார்த்து ‘ஹிட்-விக்கெட்’ முறையில் தான் அவுட்டானதை அறிந்து திகைத்துப்போய் 14 ரன்களில் வெளியேறினார்.

“>

 

இந்த விசித்திரமான அவுட்டால் ஒட்டுமொத்த மைதானமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். சாய் சுதர்சனின் இந்த துரதிர்ஷ்டவசமான அவுட்டுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக தடம் மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி, பவர்பிளேயிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து ஐபிஎல் பிளேஆஃப் வரலாற்றில் தனது மிக மோசமான புதிய சரிவைச் சந்தித்துள்ளது.