திருமண வாழ்க்கையில் ‘மூன்றாவது நபரின்’ எண்ட்ரியால் கணவன், மனைவி இடையே ஏற்படும் சண்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் அரங்கேறியுள்ள ஒரு விசித்திர சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது.

குவாலியரின் சிக்கந்தர் கம்பு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் குஷ்வாகா என்பவருக்கும் பூனம் என்பவருக்கும் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் ஆகி, 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பூனமிற்கு ஆஷு என்ற கமல் சேனுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வீட்டை விட்டு ஓடிப்போன பூனம், மார்ச் மாதம் மீண்டும் வீடு திரும்பியபோது கணவரிடம் சொன்ன நிபந்தனையைக் கேட்டு ராஜ்குமார் அப்படியே உறைந்துபோய் விட்டார்.

“நான் என் பாய்ஃப்ரெண்டுடன் தான் குடும்பம் நடத்துவேன்; உனக்கு சம்மதம் என்றால் அவனும் இதே வீட்டில்தான் நம்மோடு தங்குவான், நாம் மூவரும் ஒரே வீட்டில்  வாழ்வோம்” என்று பூனம் அதிரடி கண்டிஷன் போட்டுள்ளார்.

இதனை கணவர் ராஜ்குமார் கடுமையாக எதிர்க்கவே, இருவருக்கும் இடையே குடும்ப சண்டை வெடித்துள்ளது. உச்சக்கட்டமாக கடந்த மே 5-ஆம் தேதி கணவரைத் தாக்கிய பூனம், வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை சுருட்டிக்கொண்டு, தனது 4 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மேலும், “என்னைத் தடுக்க நினைத்தால் உன்னைத் தீர்த்துக்கட்டிவிடுவேன்” என்று கணவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பீதியடைந்த கணவர் ராஜ்குமார், தனது உயிருக்கு மனைவியால் ஆபத்து இருப்பதாகக் கூறி  எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கோரியுள்ளார்.

இந்த வினோத கள்ளக்காதல் பஞ்சாயத்து மற்றும் கொலை மிரட்டல் புகார் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.