ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் ‘ஆபிரஹாம் உடன்படிக்கையை’ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்றால் இந்த நிபந்தனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் அதிரடி முடிவு, குறிப்பாக பாகிஸ்தான் அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது கடந்த 1948-ஆம் ஆண்டு பாலஸ்தீன நிலப்பரப்பைக் கைப்பற்றி இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது. தங்களின் சக இஸ்லாமிய நாடான பாலஸ்தீனம் துண்டாடப்பட்டு இஸ்ரேல் உருவானதால், அரபு நாடுகள் அதனை ஒரு நாடாகவே ஏற்றுக்கொள்ள மறுத்தன. இதன் காரணமாக இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த மோதலைத் தணிக்கும் முயற்சியாக, கடந்த 1979-இல் எகிப்தும், 1994-இல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, அதனைத் தனிநாடாக அங்கீகரித்தன. இருப்பினும், பிற வளைகுடா அரபு நாடுகள் இஸ்ரேலைத் தொடர்ந்து புறக்கணித்து வந்ததுடன், தூதரகம், பொருளாதாரம் உள்ளிட்ட எந்தவொரு உறவையும் வைத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்தபோது, அவரது தீவிர முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தமே ‘ஆபிரஹாம் உடன்படிக்கை’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த உடன்படிக்கை ஏற்பட்டுப் பல ஆண்டுகள் ஆகியும், பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் இஸ்ரேலை இன்னும் ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. குறிப்பாக, பாகிஸ்தான் தனது 78 ஆண்டுகால வரலாற்றில் இஸ்ரேலை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதே இல்லை. ஆபிரஹாம் உடன்படிக்கையில் இணைய வேண்டும் என்ற அதிபர் டிரம்பின் புதிய அழுத்தத்திற்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், அதற்கு உடன்படவும் மறுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ஆபிரஹாம் உடன்படிக்கை என்பது நமது நாட்டின் அடிப்படை சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரானது. எனவே, அதனை ஏற்றுக்கொள்வது என்பது நமது கொள்கையை நாமே மீறுவதற்குச் சமம். ஒருபோதும் நம்பகத்தன்மை இல்லாதவர்களுடன் (இஸ்ரேல்) நாம் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும்? உலகிலேயே இஸ்ரேலை ஒரு நாடாகத் தங்களது பாஸ்போர்ட்டில் கூட குறிப்பிடாத ஒரே நாடு பாகிஸ்தான் மட்டும்தான். இந்த உடன்படிக்கையை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்பதில் நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம் என்று கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த புதிய நிபந்தனையால் சர்வதேச ராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
