நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காகச் செயல்பட்டு வரும் தனியார் விடுதி ஒன்றில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை டவுனை சேர்ந்த மகரஜோதி (39) என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து தங்கியுள்ளார். சமீபகாலமாக அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதோடு, விடுதியின் மற்ற அறைகளில் தங்கியிருந்த பெண் தோழிகளை அவர் தனது செல்போனில் ரகசியமாகப் படம் பிடிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர், மகரஜோதியின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது, அவர் விடுதிப் பெண்களை ஆபாசமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, கோவையைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விடுதி காப்பாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் மகரஜோதியைக் கைது செய்தார். கைதான மகரஜோதியிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கோவையில் வசிக்கும் கண்ணன் என்பவர் தனது காதலன் என்றும், அவரை குஷிப்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், விடுதிப் பெண்களைப் பல்வேறு கோணங்களில் படம் எடுத்து அனுப்புமாறு காதலன் கண்ணன் வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் ஆபாசப் படங்களைப் பெற்றுக் கொண்ட காதலன் கண்ணனைக் கைது செய்ய இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீஸார் கோவைக்கு விரைந்துள்ளனர். இந்த விவகாரம் நெல்லை பகுதியில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
