தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றது இந்திய அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு மாநில அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் பதவியேற்ற அன்றே தனது வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்த ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தற்போது ஆந்திராவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசியல் சூழல் மற்றும் தவெக-வின் அசுர வெற்றி குறித்து சுவாரசியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண், “தமிழ்நாட்டில் மிக எளிதாக ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள்; எங்கு பார்த்தாலும் விஜய் அவர்களின் படங்கள் மற்றும் பிரம்மாண்ட கட்டவுட்டுகள்தான் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டில் வெறும் கட்டவுட் மற்றும் ஹோலோகிராம் தொழில்நுட்பத்தை வைத்தே தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்று விடுகிறார்கள். ஆனால், நான் ஆந்திராவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியல் பயணம் மேற்கொண்டும், இந்த அளவுக்கு ஒரு பிரம்மாண்ட வெற்றியை என் வாழ்வில் பார்த்ததில்லை. இதனால் எனக்கு விஜய் அவர்களின் வெற்றியைப் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பவன் கல்யாணும் விஜய்யைப் போல ஆந்திரத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அவர் இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
