அடிக்கடி ஏற்படும் தலைவலி, மூக்கில் ரத்தக் கசிவு போன்ற சாதாரண அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக மும்பையில் ஒரு மருத்துவ அதிசயம் நிகழ்ந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலி, லேசான பார்வை குறைபாடு மற்றும் மூக்கில் தொடர் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இதனை சாதாரண சைனஸ் பிரச்சனை அல்லது மொபைல் ஸ்கிரீனை அதிக நேரம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு என்று நினைத்துள்ளனர். ஆனால், மும்பை வோகார்ட் மருத்துவமனையில் (Wockhardt Hospitals) பரிசோதித்தபோது, அந்தப் பெண்ணின் மூக்கு மற்றும் சைனஸ் பகுதியிலிருந்து மூளையின் பாதுகாப்பு அடுக்கு வரை சுமார் 6 முதல் 7 செ.மீ அளவில் ஒரு அரிய வகை புற்றுநோய் கட்டி பரவியிருப்பது கண்டறியப்பட்டது.
கட்டி மிகப்பரியதாக இருந்ததாலும், கண் மற்றும் மூளையின் முக்கிய ரத்த நாளங்களுக்கு மிக அருகில் இருந்ததாலும், பயாப்ஸி (Biopsy) பரிசோதனைக்குக் கூட காத்திருக்காமல் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். டாக்டர் பிரசாத் காஸ்பேகர், டாக்டர் கேவல் சுக்லா உள்ளிட்ட நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர், மண்டையோட்டின் வழியாகவும், மூக்கின் வழியாகவும் ஒரே நேரத்தில் டூயல் அப்ரோச் (Dual Approach) முறையில் 6 முதல் 7 மணி நேரம் இந்த அதிசிக்கலான அறுவை சிகிச்சையைச் செய்து கட்டியை முழுமையாக அகற்றினர்.
தற்போது அந்தப் பெண் முகத்தில் எந்தவித வடுக்களும் இன்றி, முழுமையாகக் குணமடைந்து வருகிறார். “அடிக்கடி ஏற்படும் மூக்கு இரத்தக் கசிவு மற்றும் தலைவலியை அலட்சியப்படுத்தக் கூடாது, ஆரம்பக்கட்ட கண்டறிதலே உயிரைக் காக்கும்” என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
