கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில், காதலை கைவிட்ட முதுகலை மாணவியின் வீட்டின் மீது ரவுடி ஒருவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்குறிப்பிட்ட பெண், கார்த்திக் என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 31 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கார்த்திக்குடனான காதலை முறித்துக் கொண்டு அவரிடமிருந்து முற்றிலும் விலகியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், அந்தப் பெண்ணை தொடர்ந்து பின்தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். ​இதன் உச்சகட்டமாக, கார்த்திக் தனது கூட்டாளிகள் மூன்று பேருடன் இருசக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு திடீரென வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளார். இந்த கொடூர தாக்குதல் மற்றும் குண்டு வீசும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த அதிர்ச்சி வீடியோ எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.