தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக்கழகம், காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்து விஜய் முதலமைச்சராகியுள்ளார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீதான அதிருப்தி காரணமாக அதிமுக எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேர் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து அவர்கள் அளித்த ராஜினாமா கடிதங்கள் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரும் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மரகதம் குமரவேல், இந்த முடிவு தங்களின் சுயநலத்திற்காக அல்லாமல் சுயமரியாதைக்காக எடுக்கப்பட்டது என்று விளக்கமளித்தார். திமுகவின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதாகவும், ஆனால் திமுகவுடன் கூட்டணி சேர தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சி.வி. சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசை ஆதரிக்க முடிவு செய்திருந்த நிலையில், அதிமுக தலைமை தங்களைப் பற்றி அவதூறு பரப்பியதாகக் குறிப்பிட்ட அவர், தொகுதி மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு சேர்க்கவே தவெகவில் இணைந்ததாகவும், முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.